ஞாயிறு, 26 ஜூலை, 2015

அரசு சித்த மருத்துவமனை மூலிகைப்பண்ணை,

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். மூலிகைப்பண்ணை அமைக்கலாம் நீங்க.அருகிலுள்ள அரசு சித்த மருத்துவமனைக்கு சென்றால் மூலிகைப்பண்ணைகளை காணலாம் வாங்க..

                பவானி அரசு மருத்துவமனை மூலிகைப் பண்ணையில் சீந்தில் எனப்படும் மூலிகை உள்ளது. இதயத்தின் வடிவத்தைப் போன்று காணப்படும் இம்மூலிகையின் தாவரப் பெயர் டினோஸ்போரா கார்டிபோலியா. 

         இதன் பயன் தெரியாமல் மூலிகைப் பண்ணையைப் பராமரிக்க வந்த ஊழியர் ஏதோ புதர்போன்று உள்ளது என வேரோடு வெட்டி அப்புறப்படுத்தி விட்டார். நன்கு வளர்ந்த இந்த மூலிகை இத்தோடு முடிந்தது. மீண்டும் வளராது என மருத்துவமனை ஊழியர்கள் எண்ணினர். ஆனால், வேப்ப மரத்தில் கொடிபோன்று படர்ந்திருந்த இம்மூலிகையின் கிளைகள் தரையை நோக்கி வளர்ந்து தொட்டது. ஆலமரத்தின் விழுதுகள் போன்று உயிர் பிடித்து தற்போது மீண்டும் வேர் பிடித்துள்ளது. இம்மூலிகையிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் பலவீனமான இதயத்தை பலப்படுத்தும் தன்மை கொண்டது.
 


           பவானி, : பவானி அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு சார்பில் காலியிடத்தில் 80 வகையான மூலிகைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
 

        பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவுக்கு பின்புறம் காலியிடத்தில் குப்பைகளும், கழிவுப் பொருட்களுமே சேகரிக்கப்பட்டு வந்தது. இவை அப்புறப்படுத்தப்பட்டு தற்போது மூலிகைச் செடிகள் வளர்க்கும் பண்ணையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு, சாதாரண மூலிகைகள் முதல் அரிய வகை மூலிகை வரை 80 வகையான மூலிகைகள் உள்ளன.
 

      இதயத்தைப் பலப்படுத்தும் மூலிகையான சீந்தில் கார்டிபோலியா, 4 வகையான கற்றாழைகள், 3 வகையான பிரண்டைகள் வளர்க்கப்படுகிறது.
 

        சாதாரணமாக எலும்பு முறிவு குணமாக 45 நாட்கள் வரை ஆகும். அதே எலும்பு முறிவை கால்சியம் சத்து அதிகமுள்ள ‘முறிவொட்டி‘ எனும் மூலிகை 25 நாட்களில் குணப்படுத்துகிறது. வில்வம், மகா வில்வம், நீல நொச்சி, கருநொச்சி மற்றும் குழந்தைப் பேறு வழங்குவதோடு, மலடு நீக்கும் துளசி, கற்பூர துளசி, தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும் சதாவேரி போன்ற மூலிகைகள் உள்ளன.
 

        புற்றுநோய்க்கு மருந்தாகும் வெண்கொடிவேலி எனப்படும் அரிய வகை மூலிகை வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும், டெங்கு, சிக்கன் குனியா நோய்களை குணப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் நிலவேம்பு, மலைவேம்பு மற்றும் ஆடாதொடை மூலிகையும் உண்டு.
மேலும், குறிஞ்சி, கரு ஊமத்தை, பல் வலிப்பூண்டு, கனக இலை உள்பட 80 வகையான மூலிகைகள் கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கிறது. 


                  நோயாளிகள் விரும்பினால் சித்தமருத்துவப் பிரிவு சார்பில் மூலிகைகள் குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இம்மருத்துவமனையில் நாள்தோறும் சராசரியாக 150 பேருக்கு நிலவேம்பு கசாயம் காலை வேளைகளில் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இதனை, மருத்துவமனை உள்நோயாளிகள் மட்டுமன்றி பொதுமக்களும் குடிப்பதற்கு வாங்கிச் செல்கின்றனர்.
 

           பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் கண்ணுச்சாமி கூறியதாவது:
        
            சித்த மருத்துவ பிரிவுக்கு சராசரியாக 150 நோயாளிகள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். 
               இங்கு, தொடு வர்மம், தொக்கனம் எனப்படும் மசாஜ், நீராவிக் குளியல், தாரா, எண்ணெய் தேக்கம், பட்டி கட்டல், பற்று, ஒத்தடம், ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆவி பிடிக்கும் முறை என பலவகையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

            வாரத்தில் இரு நாட்கள் தியானம் மற்றும் யோகா மூலமும் நோய் குணப்படுத்தப்பட்டு வருகிறது. கலாசார, பாரம்பரிய சித்தர்களின் மண்ணின் மருத்துவ முறைகளாக சித்த மருத்துவப் பிரிவில் அளிக்கப்படும் சிகிச்சை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 

           பொதுவாக மூட்டுவலி, சைனஸ், ஆஸ்துமா, காலாஞ்சகப்படை (சொரியாசிஸ்), தோல் வியாதிகள் மற்றும் இடுப்பு, கழுத்து எலும்பு தேய்வு நோயாளிகள் அதிகம் பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
 

  இவ்வாறு டாக்டர் கண்ணுச்சாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக