நம்ம வட்டார மருத்துத் தாவரங்களை அடையாளப்படுத்துவோம்..மூலிகைத் தாவரங்களை தொகுத்து சேமிப்போம்.
திங்கள், 6 ஜூலை, 2015
துத்தியின் மருத்துவக்குணங்கள்.
இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக்
காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே
அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது
தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும். துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை
ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை,
வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா
மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும். இதன் பூ இரத்தப்
போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை
உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள்
இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த
மருத்துவக் குணம் கொண்டது.
வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.
வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி,
கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி,
ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.
ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don;
மருத்துவக் குணங்கள்
ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.
துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120
நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால்
நீக்க வேண்டும்)
துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு
தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர
மூல நோய் கட்டுப்படும்.
துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து
சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து
துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை
குணமாகும்.
துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.
துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி
அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில்
கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி
குணமாகும்.
துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம்
எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை
சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.
துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு
எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில்
படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.
துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200
மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து
காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.
துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.
துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர்
நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய்
சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.
துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி
சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து
குணமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக