சனி, 9 ஏப்ரல், 2016

போக்குவரத்துக் குற்றங்களில் முக்கியமானவை...01

சைகைகளும்,போக்குவரத்து சின்னங்களும் சாலையின் மொழியாகும்.
மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.முதலில் போக்குவரத்துக் குற்றங்கள் என கருதப்படுபவை பற்றி தெரிந்துகொள்வோம்.
(1)ஓட்டுநர் உரிமம் இல்லாமல் அல்லது உரிமம் செல்லத்தக்க நிலையில் இல்லாமல் வாகனத்தை ஓட்டுவது குற்றமாகும்.தண்டனை மூன்று மாதங்கள் சிறை மற்றும் ஐநூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(2)சிறுவர்கள் உரிய வயது பூர்த்தியாகும் முன்னரே பொதுச்சாலையில் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். தண்டனையாக மூன்று மாதங்கள் சிறை மற்றும் ஐநூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(3)வாகனத்தின் உரிமையாளரோ,வாகனத்தின் பொறுப்பாளரோ அந்த வாகனத்தை ஓட்டுவதற்கு உரிய உரிமம் இல்லாத ஒருவரை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும்.அல்லது பெற்றோர்களோ நண்பர்களோ பாதுகாவலர்களோ இளவயது சிறுவர்களை வாகனத்தை ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும்.மேற்கண்ட குற்றங்களுக்கு மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபாய அபராதமும் செலுத்த வேண்டும்.

(4)ஒருவருடைய ஓட்டுநர் உரிமத்தை அல்லது பழகுநர் உரிமத்தை வேறு ஒருவர் பயன்படுத்த அனுமதிப்பது குற்றமாகும்.முதல் தடவை நூறு ரூபாய் அபராதம் ஆகும்.அதுவே இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகளுக்கு அனுமதித்தால் முந்நூறு ரூபாய் அபராதமாகும்.

(5)தகுதி இழக்கப்பட்ட ஒருவர் வாகனத்தை ஓட்டுவது குற்றமாகும்.ஓட்டுநர் உரிமம் வேண்டி விண்ணப்பம் செய்துள்ளவர் வாகனம் ஓட்டுவது குற்றமாகும்.ஏற்கனவே வைத்துள்ள ஓட்டுநர் உரிமத்தில் எழுதப்பட்டுள்ள மேற்குறிப்புகளை அழித்துவிட்டு ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்துளவர் வாகனம் ஓட்டுவது குற்றமாகும். தண்டனை மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை மற்றும் ஐந்நூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(6)அனுமதிக்கப்பட்ட வேகத்தை மீறி ஓட்டுவதும் அல்லது மிக மெதுவாக ஓட்டுவதும் குற்றமாகும்.முதல் தடவை குற்றத்திற்கு நானூறு ரூபாய் அபராதம்.அதுவே இரண்டுக்கும் மேற்பட்ட தடவை குற்றமானால் ஆயிரம் ரூபாய் அபராதம் ஆகும்.

(7)அனுமதி வேகத்திற்கும் அதிக வேகத்தில் ஓட்ட அனுமதிப்பது குற்றமாகும்.தண்டனை முதல் தடவை என்றால் முந்நூறு ரூபாய் அபராதம் அதுவே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை என்றால் ஐந்நூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(8)அனுமதிக்கப்பட்ட எடையளவுக்கு அதிகமாக ஏற்றி வாகனத்தை ஓட்டினால் ஓட்டுவதற்கு அனுமதியளித்தாலோ குற்றமாகும்.தண்டனை குறைந்தபட்சம் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் ஆகும் கூடுதலாக ஏற்றப்பட்டுள்ள ஒவ்வொரு டன் எடைக்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் இறக்கு கூலி அபராதம் ஆகும்.

(9)அபாயகரமாக வாகனத்தை ஓட்டுவதும் குற்றம் ஓட்ட அனுமதியளிப்பதும் குற்றம் ஆகும். தண்டனை முதல் தடவை ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் சிறைத்தண்டனை ஆகும்.அதுவே இரண்டாவது தடவை அல்லது தற்கு மேல் குற்றம் புரிந்தால் இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டாண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இவையிரண்டும் ஆகும்.

(10)குடிபோதையில் அல்லது போதை மருந்து உட்கொண்டு வாகனத்தை ஓட்டினாலோ அல்லது ஓட்டுவதற்கு அனுமதியளித்தாலோ குற்றமாகும்.தண்டனை முதல் தடவை குற்றத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அல்லது இவை இரண்டும் ஆகும். இதே குற்றத்தை இரண்டாவது தடவை  மற்றும் அதற்கு மேலும் செய்தால் மூவாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டாண்டுகள் சிறை அல்லது இவை இரண்டும் ஆகும்.

(11) மனநிலை சரியில்லாமல் அல்லது உடல் நிலை சரியில்லாமல் வாகனத்தை ஓட்டினால் அல்லது வாகனத்தை ஓட்டுவதற்கு அனுமதியளித்தால் குற்றமாகும்.முதல் தடவை இருநூறு ரூபாய் அபராதம் ஆகும்.அதுவே இரண்டாவது தடவை மற்றும் அதற்கும் அதிகமான தடவை எனில் ஐந்நூறு ரூபாய் அபராதம் ஆகும்.

(12) காப்பீடு செய்யாமல் வாகனத்தை ஓட்டினால் மூன்று மாதங்கள் வரையில் சிறை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இவை இரண்டும் ஆகும்.

         இன்னும்  தொடரும் ....................... 
என அன்பன், 
C.பரமேஸ்வரன், 9585600733
 அரசுப் பேருந்து ஓட்டுநர்,
தாளவாடி கிளை,
ஈரோடு மாவட்டம்.

    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக